விந்தை நிறைந்த உலகின் விஞ்ஞான வளர்ச்சியின் பங்களிப்புகள்
கே. நிரோஜன் - வித்யா ஈ நியூஸ் கட்டுரை போட்டி 2023 இன் வெற்றி பெற்ற கட்டுரைகள்
மனிதனை சிந்தனையில் ஆழ்த்த பங்களிப்பு செய்கின்ற ஓர் அறிவியல் ஊடகமாக விஞ்ஞானம் திகழ்கின்றது. ஆரம்பகால மனிதன் கல்லை உரசித் தீயைக் கண்டுபிடித்ததில் இருந்து தனது அன்றாட வாழ்க்கை தேவையை நிறைவேற்றுவதற்கு விஞ்ஞானத்தை பிரயோகித்து உள்ளதை காண முடிகின்றது. அதிலிருந்து படிப்படியாக மனித சிந்தனைகள் உருவாகுவதற்கு அவனது கண்டுபிடிப்பு உதவியது. கல்லாயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடுதல், கல்லாலான உபகரணங்களை செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு விஞ்ஞான தொழிநுட்பம் பிரயோகிக்கப்பட்டதன் மூலம் ஆரம்ப காலத்தின் விஞ்ஞான வளர்ச்சியின் பங்களிப்பை அறிய முடிகிறது.
ஆதிகால மனிதன் தன் அறிவை புதிய சிந்தனைகள் மூலம் விரிவுபடுத்தி நிரந்தர குடியிருப்புகளை அமைக்கத் தொடங்கினான். பின் படிப்படியாக உலோகப் பயன்பாடு, மட்பாண்ட உற்பத்தி என்று வளர்ச்சியடையத் தொடங்கியது. இவ்வளர்ச்சிக்கு விஞ்ஞான தொழில்நுட்பமே காரணமாக அமைந்திருந்தது.
முன்பு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வெவ்வேறாகவே காணப்பட்டது. மறுமலர்ச்சி காலத்தில் நியூட்டன், கலிலியோ கலிலி, நிக்கலஸ் கொப்பநிக்கஸ் போன்ற பல விஞ்ஞானிகள் பல கோட்பாடுகளை முன் வைத்துள்ளனர். அதனை ஆராய தொடங்கிய மனிதன் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் கைத்தொழில் புரட்சி உருவானது. கைத்தொழில் புரட்சி காரணமாக உலகெங்கும் பரவலான மாற்றத்தை கண்டுள்ளது எனலாம். இம்மாற்றங்களில் பல இயந்திர சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை, புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் உருவாக்கப்பட்டமை என்பன பிரதான விடயமாக விளங்குகின்றது. இச்சாதனங்களின் கண்டுபிடிப்புகளால் மனித வேலைகள் இலகு படுத்தப்பட்டுள்ளது. அதாவது பல மணி நேரங்களில் செய்யக்கூடிய வேலைகளை ஒரு சில மணி நேரத்தில் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் நேரமும் உழைப்பும் மீதப்படுகின்றது. இதன் மூலம் ஒரு நாளில் பல்வேறு உற்பத்திகளை மேற்கொண்டு பொருளாதார நன்மைகளை பெறக்கூடியதாய் அமைந்துள்ளது. இக்கைத் தொழில் வளர்ச்சியால் பல்வேறு நாடுகளுக்கு இடையே வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்த கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை காணக் கூடியதாய் உள்ளது.
இத்தாலி, ஜேர்மன் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் இயந்திர சாதனங்களின் உற்பத்தியின் காரணமாக கைத்தொழில் புரட்சியில் முன்னணியில் காணப்பட்டுள்ளது. இவ்வளர்ச்சி சிறிய காலத்தில் பின் ஏற்பட்ட முதலாம் இரண்டாம் உலக மகா யுத்தம் காரணமாக இந் நாடுகளின் கைத்தொழில் வீழ்ச்சியை கண்டன. இவ் யுத்தத்தின் காரணமாக பேரழிவை சந்தித்த ஜப்பான் மீண்டும் தனது பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கைத்தொழில் துறையை தேர்ந்தெடுத்தது. இவ் வளர்ச்சிக்கு காரணம் ஜப்பான் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்கள் அனைத்தையும் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பல மோட்டார் வாகனங்களையும், இயந்திர சாதனங்களையும், தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகளையும் உற்பத்தி செய்தமையே காரணமாகும். மேலும் இதன் உற்பத்திகள் நீண்டகால நீடித்த பாவனையையும் அதி நவீன தொழில்நுட்ப பயன்பாடும் சொகுசு தன்மையும் போன்ற காரணங்கள் பல நாடுகளின் இதன் உற்பத்திக்கு கேள்வி அதிகரித்தது. அதனால் இவ்வாகன பயன்பாடுகள் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டது. இப் படிப்படியான வளர்ச்சியை கண்டு ஜப்பான் கைத்தொழிலில் முன்னணி நாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. எனினும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் அணு ஆயுத வளர்ச்சி விண்வெளி பயணங்கள் என்பவற்றில் முன்னிலையில் காணப்படுவதால் இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா கைத்தொழிலிலும் பொருளாதாரத்திலும் வல்லரசாக காணப்படுகின்றது.
இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியானது அசுர வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக நாம் காண்கின்றோம். இதற்கெல்லாம் காரணம் மனிதனின் அறிவுப் பெருக்கமும் ஆராய்ச்சியும் வல்லமையும் ஆகும்.
அன்று காற்றின் வலிமைக்கே கடிவாளம் பூட்டிய மனிதன் இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் மண்ணிலும், கடலிலுமென்ன, விண்ணிலும் பவனி வருகிறான். ஆராய்ச்சிகள் பல செய்து சந்திரனுக்கு சென்று வந்து விட்டான். அடிக்கடி விண்கலங்களை ஆகாயவெளிக்கு அனுப்பி வைத்து செய்திகளை சேகரிக்கிறான். விண்ணிலே மனிதன் வீடு கட்ட விளைகிறான் இன்று.
இயற்கையையும் மழையையும் நம்பியே வாழ்ந்தவன் செயற்கை மழை காண்கிறான். வரண்ட பகுதிகளுக்கு நீரைத் திருப்பி பயிர் செய்வதும், நீர்வீழ்ச்சிகளை மின் சக்தியாக்கி ஒளியூட்டுவதும் சாதாரணமான காரியங்களாகி விட்டன. அவனுக்கு சூரிய ஒளியின் மூலம் அடுப்பு மூட்டவும் பசளையின் மூலம் உயிரியல் வாயுவை எழுப்பி வாகனங்களை ஓட்டவும் பழகிக் கொண்டான் நவீன குடிமகன். விவசாயத்துறைக்கு விஞ்ஞானம் தந்த வியத்தகு உதவிகள் எண்ணிலடங்கா. மாடு கட்டி ஏர்பூட்டி எண்ணிலடங்கா இன்னல்களுக்கு மத்தியில் வயல் உழுத விவசாயி இன்று நவீன இயந்திரங்கள் புதிய செயன் முறைகளோடு மண்ணிலே இருந்து மதிப்பு மிக்க விளைவுகளைப் பெறுகிறான்.
நவீன ஒளிப்படப்பிடிப்புக் கருவிகள் தொலைக்காட்சிகள் நவீன ஊடக சாதனங்கள் என்பவையோடு இன்றைய கணனிகள் யுகத்தில் வலைப் பின்னல்களின் பயன்பாட்டினால் மனிதன் வெறும் பயன்பாடுகள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் கிடைத்த பேறுகளே. இன்று கணினி யுகத்தையும் தாண்டி மனிதன் தகவல் தொழில்நுட்பத் துறையில் பாரிய முன்னேற்றம் கண்டுவிட்டான். மனிதனால் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாத விந்தைகளை கணனி மூலம் செய்ய முடிகிறது. பொங்கிப் பிரவாகிக்கின்ற கற்பனைகளெல்லாம் நிஜம் என்று எண்ணத் தோன்றுகின்ற அதிசய உலகில் அனைத்தும் கணனி மயப்படுத்தப்பட்ட காலத்தை “கணினி யுகம்” என்று அழைப்பதை இங்கு குறிப்பிடலாம். புதிது புதிதாக அறிமுகமாகும் தொழில்நுட்பங்கள் யாவும் மனித மூளையில் சிருஷ்டி தானா என்ற பிரமிப்பை ஏற்படுத்திவிடுகிறது. விஞ்ஞானத்தின் பரிசான இக்கணினி என்ற சாதனத்தால் பெற்ற இணையத்தள வசதி மூலமும் வலைப் பின்னல் மூலமும் உடனுக்குடன் செய்தித் தகவல் பரிமாற்றங்களும் செய்திகளும் அறிவுறுத்தல்களும் மனித குலத்தை சில நிமிடங்களில் ஒன்றிணைக்கும் வெகுமதியாக விஞ்ஞானம் தந்தவையே. இதனால் உலகம் எமது கைக்குள்ளேயே சுருங்கி விட்டது என்றால் மிகையாகாது.
மருந்துகளின் கண்டுபிடிப்பால் நோய்கள் தீருகிறது. வாழ்வுக் காலமும் ஆரோக்கியமும் நீடிக்கிறது. உலகில் சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் தொல்லைகளுக்கும் விஞ்ஞானம் தீர்வு தேடி க் கொண்டுதான் இருக்கிறது.
எத்தனையோ புதிய கண்டுபிடிப்புக்களை நவீன விஞ்ஞானி நாள்தோறும் கண்டுபிடித்துக் கொண்டே வருகிறான். உதாரணத்துக்கு பின்வரும் விடயத்தை குறிப்பிடலாம். மனித உயிர் வாழ்வுக்கு அதிக முக்கியமான இதயம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இதய மாற்று சிகிச்சைகளிலும் வெற்றி கண்ட விஞ்ஞானம் மனித மூளை தொடர்பான அண்மையில் கண்டுபிடித்திருக்கும் புதிய விடயம் எம்மை வியப்பில் ஆழ்த்தவல்லது. மாற்று உறுப்புகள் பொருத்தப்படுவது போல மூளையையும் மாற்றலாம். மரபுக் கோளாறுகளினால் மூலை விருத்தி குறைந்தவர்களும் கல்வியறிவு நாட்டங்களில் பின்தங்கியவர்களையும் நம்மையும் அசர வைக்கும் கண்டுபிடிப்பு இதுவாகும்.
மனித மூளையில் சிறிய கொம்பியூட்டர் “சிப்” ஒன்றைப் பொருத்தப் போகிறார்கள். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி தடைபட்ட நோயாளி ஒருவருக்கு இப்பரிசோதனை செய்யப்பட்டது. கம்பியூட்டரில் இருந்து பிறப்பிக்கப்படும் கட்டளையையடுத்து இந்த சிப் மூளையின் நரம்பு மண்டலங்களைத் தூண்டி அசைக்கப் பண்ணி வெற்றி கண்டிருக்கிறது. நரம்பியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் டாக்டர். பிலிப் கென்னடி என்பவர் இதன் பின்னணியில் கூறப்படும் விஞ்ஞானி ஆவர். இதுவரை உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் நாம் யார் என்ற உணர்வை மிரட்டவில்லை. ஆனால் இந்த கம்பியூட்டர் சிப்புகளால் மூளையின் செயல்வேகமானது தூண்டப்படுகிறது. உயிர்களின் பிரச்சினைகளில் சிலவும் மிக எளிதாகிவிடும் என்கிறார்கள். மூளையின் திறனை அதிகரிக்கச் செய்யும் நாற்காலியொன்று யப்பானில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நாற்காலியில் உட்கார்ந்து ஓய்வெடுத்தால் அதில் உள்ள காந்தம் உடலின் உட்புறத்தில் ஊடுருவி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. இரத்த அளவு கூடி பிளாஸ்ரிக் தன்மையுடைய “சிப்” மூளையானது சுறுசுறுப்பாக தொழிற்பட ஆரம்பிக்கிறது என்று டாக்டர் கென்னடி குறிப்பிடுகிறார்.
கற்பனை கதைகளில் கூட இடம் பெறாத அற்புதங்களை விஞ்ஞானம் சென்ற நூற்றாண்டு வரை சாதித்து வந்திருக்கிறது. எனினும் விஞ்ஞானம் சாதிக்க வேண்டிய பல சாதனைகள் இன்னும் உள்ளன. புற்றுநோய், தொழுநோய், எயிட்ஸ், டெங்கு போன்ற நோய்கள் இன்னமும் சரியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. பெருகிக்கொண்டிருக்கும் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு விஞ்ஞானம் உதவுவது உண்மையே. ஆனாலும் இன்றுள்ள கோடிக்கணக்கான மக்கள் பசி, பட்டினி இன்றி போட்டி, பூசல், போர் போன்ற செயற்கை அனர்த்தங்கள் இன்றி அமைதி வாழ்வு வாழ வேண்டிய வழிமுறைகளை விஞ்ஞானமே ஆக்கித் தரவும் வேண்டும். எனவே விஞ்ஞானத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் இன்னும் எவ்வளவோ கடமைகள் காத்திருக்கின்றன என்பதை யாருமே மறக்க முடியாது. இவற்றை ஈடு செய்வதற்கு வருங்காலத்தில் ஒரு படையணி எமக்கு வேண்டும். விஞ்ஞான விருத்தியின் ஆக்கபூர்வமான பக்கத்திற்கு அதிக வலு சேர்க்கக் கூடியதும் செழுமை மிக்கதுமான விஞ்ஞான அறிவு நிறைந்த இளைஞர் படையணி ஒன்று உருவாகுமானால் விஞ்ஞானம் தன் கடமையில் வெற்றி கண்டதாக கருத முடியும்.
இவ்வாறு விஞ்ஞானத்தின் உடைய பயன்பாடுகள் மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்கிப் பெருகி மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது விஞ்ஞானம் தந்த பெரிய பயன்பாடு ஆகும்.
தொகுத்துப் பார்க்கும்போது விஞ்ஞானம் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் தன்னுடைய ஆட்சியை செலுத்தி வருகின்றது. மனித வாழ்வின் காலவரையறையையே தீர்மானிக்கும் பெரும் காரணியாக அமைந்து உயிர் மாற்று சிகிச்சைகளுக்கும் அடித்தளம் இடுகிறது. அதன் விரிவு எல்லை தாண்டுமோ என்ற அளவுக்கு அதன் விந்தை அளப்பெரியதே.