வாழ்க்கை விஞ்ஞானம்
கே. சரண்யா- தரம் - 11 , Vidya E News Article Contest -2023, வெற்றி பெற்ற கட்டுரைகள்
விந்தை மிகு விஞ்ஞான சந்தை போகும் உலகமதில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஒருவனது வாழ்வில் விஞ்ஞானம் உயிர் நாடியாக விளங்;குவதோடு உயிர் மூச்சாகவும் காணப்படுகின்றது. மனிதன் இன்றி விஞ்ஞானம் இல்லை. விஞ்ஞானம் இன்றி இவ்வுலகே இல்லை என்பது அறிஞர் பலரது வாக்கு. அன்று தொட்டு இன்று வரை விஞ்ஞானமே மனிதனையும் இவ்வுலகத்தையும் ஆட்சி செய்கின்றது என்றால் அது மிகையாகாது.
இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் எமக்கு எவ்வளவு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. மனிதன் கருவிலே தோன்றிய காலத்திலிருந்து அவனது ஆயுள் முடிந்த பின்பும் விஞ்ஞானத்தின் பணி தொடர்வதைக் கண்டறிகின்றோம். கல்லையும் கல்லையும்; உரசி தீயைக் கண்டு பிடித்ததில் இருந்தே கண்டு பிடிப்புக்கள் உருவாகின. அன்றிலிருந்து இன்று வரை விஞ்ஞானம் வானளாவிய ரீதியில் வளர்ந்து விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையே விந்தைகள் செய்து கொண்டிருக்கின்றது.
மருத்துவ துறையில் நோய்களை கண்டு பிடிப்பதற்கும் கண்டு பிடித்த பின் அவற்றை குணப்படுத்துவதற்கும் விஞ்ஞான உபகரணங்கள் பெரிதும் உதவுகின்றன. இதனால் இன்று இறப்புக்கள் குறைந்து மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கின்றது. வருமுன் காப்பது சிறந்ததல்லவா? இதற்கும் விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களுக்கும் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளும் உதவுகின்றன. கல்வித்துறையில் விஞ்ஞானம் அளப்பரிய பணிகளை ஆற்றி வருகின்றது. தொலைக்காட்சி வானொலி கணணி கல்விக்கான ஆய்வு கூட உபகரணங்கள் மற்றும் நவீன கற்பித்தல் முறைகள் யாவும் விஞ்ஞான வளர்ச்சியின் விளைவே ஆகும்
அது மட்டுமன்றி பரந்த உலகம் இன்று சுருங்கியுள்ளதானது, போக்குவரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியாலேயாகும். உலகின் எப்பாகத்திலிருந்தும் நினைத்தவுடன் நினைத்த இடத்திற்கு சென்று வரக் கூடியதாய் இருப்பது விரைவான போக்குவரத்தினாலேயேயாகும். விண்வெளிப் பயணங்களும் கோள்கள் விண் மண்டலங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் விஞ்ஞானத்தின் விருத்தியினாலேயே ஏற்பட்டிருக்கிறது.
மேலும் விவசாயத்துறையில் நவீன முறைகள் புகுத்தப்பட்டதால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இயற்கை அழிவுகள் முன்கூட்டியே அறியப்பட்டு தவிர்க்கப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன. விளைபொருட்கள் விளைந்த பின் நவீன முறையில் அறுவடை செய்யப்படுவதுடன் நீண்ட காலத்திற்கு கெட்டுப் போகாமல் நவீன முறையில் பாதுகாக்கப்படுகின்றன. சமையலிலும் மின்சாரத்தினால் இயங்கும் இடிக்கும் அரைக்கும் கருவிகள் குளிர்சாதனப் பெட்டிகள் எனப் பல்வேறு உபகரணங்கள் பயன்படுகின்றன. விளையாட்டுத் துறையிலும் பொழுது போக்குத் துறையிலும் இன்று நவீன மயம் புகுந்துள்ளது. மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் இன்று பெருமளவிற்கு விஞ்ஞானத்தின் உதவியால் விரைவாக முடிக்கப்படுவதுடன் பொருட்களின் உற்பத்தியும் தரமும் உயர்ந்து காணப்படுகின்றன.
இவ்வாறு பல்வேறு துறைகளிலும் நன்மை புரிந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியே சில சந்தர்ப்பங்களில் மனிதனின் அழிவிற்கும் காரணமாகி விடுகின்றது. போர் ஆயுதங்கள், அணு ஆயுதங்கள், யுத்த விமானங்கள், கப்பல்கள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் என மனித குலத்தின் பேரழிவிற்கு வழிவகுக்கும். இவையும் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக்களே. இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் இவை அழிவினை விளைவித்து வருவதனை வேதனையுடன் கண்டு வருகின்றோம். தீயவற்றை விடுத்து நல்லனவற்றை பகுத்தறிந்து அன்னப்பறவை நீரைத் தவிர்த்து பாலை அருந்துவது போல் நாமும் விஞ்ஞானம் தரும் நன்மைகளைப் பயன்படுத்தி நன்மை பெற வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலமாhக எம் எதிர்கால சந்ததியின் அறிவு மேலோங்குவதோடு எம் கற்பனைக்கும் சிந்தனைக்கும் எட்டாத பல்வேறு விடயங்களை எதிர்காலத்தில் கண்டுபிடித்து எம் உலகம் மேலோங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை ஒழிய தீயனவற்றிக்கு இடம் தரக் கூடாது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித குலத்தின் வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் பயன்பட வேண்டும். விஞ்ஞானத்தின் துணையுடன் வாழ்வு வளம் பெற வேண்டும்.
எனவே விஞ்ஞானத்தின் விருத்தி நல்ல வழியில் பயன்பட வேண்டும். மாணவர்களாகிய நாமே எதிர்காலத்தின் தூண்கள். அதனால் விஞ்ஞானத்தினை எம் எதிர்கால நன்மைக்கு மாத்திரம் பயன்படுத்தி எம் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றுவோம்.
கே. சரண்யா
தரம் – 11
மன ;ஃ ஆண்டான் குளம் றோ.க.த.ம.வி.